கர்நாடக மாநிலம் கடாக் மாவட்டத்தில் உள்ள ஹட்லி கிராமத்தில் அரசுப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இதில் ஒப்பந்த ஆசிரியராக 45 வயதான முத்தப்பா எல்லப்பா குரி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இப்பள்ளியில் 4 ஆம் வகுப்பில் பாரத் பாரிகேரி என்ற 10 வயது மாணவன் படித்து வருகிறார். இவரது தாய் கீதாவும் அதே பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராகப் பணிபுரிகிறார். மாணவன் பாரத் வகுப்பில் சேட்டை செய்ததாகக் கூறி ஆசிரியர் முத்தப்பா அவரை இரும்பு ராடு கொண்டு கடுமையாக அடித்துள்ளார்.
அடியில் வலி தாங்காமல் சிறுவன் அலற அறைக்கு வந்த அவரது தாய் கீதா தனது மகன் அடி வாங்குவதைப் பார்த்து முத்தப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தப்பா, ஆசிரியர் கீதாவினையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
தாய் அடி வாங்குவதைக் காணப் பொறுக்காது அதைத் தடுக்க வந்த மாணவனை, ஆசிரியர் முத்தப்பா முதல் தளத்தில் இருந்து கீழே வீசியுள்ளார். கீழே விழுந்த பாரத்தைக் கண்ட அருகிலிருந்தோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து முத்தப்பா தலைமறைவு ஆகிவிட, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.