மகாராஷ்டிராவில் கனமழை பொழிந்து வரும் நிலையில் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருவேறு இடங்களில் கனமழையால் கட்டடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை அருகே செம்பூரின் பாரத் நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல் மும்பையின் வீக்ரோலி பகுதியில் மற்றொரு கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், அந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் வீடு இடிந்து உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது இரங்கலை பதிவு செய்துள்ளார். மாநில அரசு சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை அம்மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்திருக்கிறார். அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ரயில் சேவை என்பது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்து சேவைகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்ட நிலையில், தற்போது ரெட் அலர்ட் ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.