வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரிக் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நேற்று (21.11.2021) விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து சிங்கு எல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கத் தலைவர்கள், மீதமுள்ள தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு தீர்க்கும் வரையில், நாடாளுமன்றத்தை நோக்கிய ட்ராக்டர் பேரணி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து, இன்று லக்னோவில் மகா பஞ்சாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ள விவசாய சங்கத் தலைவர்கள், கிசான் மோர்ச்சாவின் அடுத்த கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதைப் போலவே விவசாய சங்கத் தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் அவர்கள், தங்களது எஞ்சிய கோரிக்கைகள் குறித்து உறுதியான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என கூறியுள்ளனர்.
தொடர்ந்து அந்தக் கடிதத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விவசாயிகளின் சட்ட உரிமையாக்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும், காற்று மாசு தொடர்பாக விவசாயிகள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கக் கூடாது, லக்கிம்பூர் கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்து கைதுசெய்ய வேண்டும், போராட்டத்தில் உயிர்களைத் தியாகம் செய்த சுமார் 700 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடும், அந்தக் குடும்பங்களின் மறுவாழ்வுக்கு ஆதரவும் அளிக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவிடம் அமைக்க சிங்கு எல்லையில் நிலம் ஒதுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் அந்தக் கடிதத்தில், "தெருக்களில் உட்கார்ந்திருப்பதை நாங்கள் விரும்பவில்லை என உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். இந்த மற்ற பிரச்சினைகளையும் விரைவில் தீர்த்துவிட்டு, எங்கள் வீடுகளுக்கும், குடும்பங்களுக்கும் விவசாயத்திற்கும் திரும்ப வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். நீங்களும் இதை விரும்பினால், மேற்குறிப்பிட்ட ஆறு விவகாரங்கள் குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுடன் அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர்.