காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சில சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்கள் ஆகியோர் பாஜக -விடம் ஆதாரம் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பவர்கள் தேச விரோதிகளாகவே (ஆன்டி இந்தியன்) இருப்பார்கள் என்று பாஜக கூறி வருகிறது.
இந்நிலையில் இதனை பற்றி பாஜக வின் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயரைக் கூறி வாக்குக் கேட்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள், உயிர்தியாகம் செய்த வீரர்களின் மரணத்தை அரசியலாக்கியதற்கு அவர்களே அனைவரும் தான் பொறுப்பு.
அதேபோல, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்புபவர்கள், நமது வீரர்களின் துணிச்சலை அவமதிப்பதற்கு சமம். மேலும் அரசியல் ரீதியாக எந்த எதிர்க்கட்சிகளையும் தேச விரோதி என்று அழைப்பதும் தவறு. இது கருத்து சுதந்திரத்தை மீறிய செயலாகும். தேசபக்தி என்பது எந்த ஒரு கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது.
புல்வாமா தாக்குதலுக்கு நடத்தப்பட்ட பதில் தாக்குதலுக்கு உரிமை கோரி ஏராளமான அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். தாக்குதலின் வெற்றி குறித்து பதாகைகளும், சுவரொட்டிகளும் ஒட்டிக்கொண்டு, அந்த தாக்குதலின் வெற்றியை தங்களுக்கு கிடைத்த வெற்றி போல் பேசுகிறார்கள். ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியாகக் கருதவில்லை. பல பாஜக எம்.பி.க்கள் ராணுவ உடை அணிந்து பிரச்சாரம் செய்கிறார்கள்" என கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சிலமாதங்களுக்கு முன்பு வரை பாஜக வை எதிர்த்து வந்த சிவசேனா, அதன் பின் கடந்த இரு மாதங்களுக்கு முன் பாஜக வுடன் இணைந்தது. தற்போது பாஜக வுடன் இணைந்து இருக்கும் பொழுதே பாஜக வை விமர்சிப்பது போல அதன் பத்திரிகையில் தலையங்கம் வெளியாகி இருப்பது அரசியல் நோக்கர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா பத்திரிகையின் இந்த தலையங்கம் அவர்களுக்குள் ஏதுனும் மனக்கசப்புகள் ஏற்பட்டதற்கான வெளிப்பாடாக கூட இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.