இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், அது கலவரமாக மாறியது.
இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சியினர், கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து 7 வது நாளான நேற்று முன்தினம் வரை இரு அவைகளிலும் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு நேற்று மணிப்பூருக்கு நேரில் சென்று இரு குழுக்களாக ஆய்வு செய்து வருகிறது. 21 எம்.பி.க்கள் கொண்ட இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். கடந்த 4 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இரு சமூகங்களை சேர்ந்த மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவுடன் சந்தித்து பேசினர். அப்போது மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவது அவசியம். இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த சந்திப்பின்போது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழு இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயிடம் ஒரு கடித்தை அளித்தனர். அதில், “கடந்த 89 நாட்களாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை மத்திய அரசிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இதனால் மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுத்து இயல்புநிலை திரும்ப மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வழிவகுக்கும்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்த பிறகு இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “மணிப்பூர் வன்முறைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். வாய்ப்பு கிடைத்தவுடன் இது குறித்து நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். மக்கள் எழுப்பிய பிரச்சனைகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் குறைபாடுகளை நாங்கள் இங்கு பார்த்தோம். மத்திய அரசு தாமதிக்காமல், எங்களின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்று, மணிப்பூர் பிரச்சனையில் விவாதம் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். மணிப்பூரில் நிலைமை மோசமாகி வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்த வன்முறை சம்பவங்கள் எழுப்புகிறது” என தெரிவித்தார். மேலும் மணிப்பூர் தற்போதைய கள நிலவரம் குறித்த அறிக்கை ஒன்றையும் தயாரித்து மத்திய அரசிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளனர்.