புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை பள்ளி மாணவ மாணவிகள் நேரில் பார்த்து தெரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவிகளுக்கு சட்டசபை நிகழ்வுகளை பார்க்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதன்முறையாக திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 20-பேர் சட்டப்பேரவைக்கு வந்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் மைய மண்டபத்திற்கு உள்ளே சென்ற அவர்கள் பார்வையாளர்கள் அறையில் அமர வைக்கப்பட்டனர். அப்போது சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக அரசுப் பள்ளி மாணவிகள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகளை நேரில் அமர்ந்து கண்டு ரசித்தனர்.
இதனையடுத்து சட்டப்பேரவை அலுவலகம் சென்ற மாணவிகளுக்கு சபாநாயகர் செல்வம் சிற்றுண்டிகளை வழங்கினார். தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சபாநாயகர் செல்வம் நினைவு பரிசினையும் வழங்கினார். அப்போது சட்டப்பேரவை தலைவர் செல்வம் மாணவிகளை பார்த்து, 'சட்டப்பேரவை நிகழ்வுகளின் மூலம் நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்? மேலும் என்னவாக விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். அப்போது மாவட்ட ஆட்சியரும் மாணவிகளிடம், 'என்ன எம்.எல்.ஏ-வாக விரும்புகிறீர்களா? என்று கேட்க, அதற்கு பதில் அளித்த மாணவிகள், "என்ன சார் எம்.எல்.ஏ-வோட நிறுத்திட்டீங்க... பி.எம் ஆகணும்" என்று கூறி சபாநாகரையும், அதிகாரிகளையும் நெகிழ வைத்தனர். மேலும் தங்களது பள்ளி அருகே மதுபானக் கடை உள்ளது. இதனால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். எனவே அந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்றி தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாணவிகள் கூறும்போது, " சட்டசபை நிகழ்வுகளை இதுவரை பார்த்ததில்லை. நேரில் பார்த்தது நல்ல அனுபவமாக உள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து தெரிந்து கொண்டோம். மேலும் சபாநாயகரிடம் பேசும்போது எங்கள் பள்ளி அருகாமையில் உள்ள மதுபானக் கடையை அகற்றி கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தனர்.