ஆந்திரா மாநிலத்தின் மேற்கு கோதாவரி பகுதியில் அமைந்துள்ளது எலுரு மண்டலம். இம்மாவட்டத்திலுள்ள 300க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாயில் நுரை தள்ளுவதோடு மயக்கமடைந்து விடுகிறார்கள். இவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மர்மநோய் எதனால் ஏற்பட்டது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குமட்டல், வலிப்பு மற்றும் மயக்கம் ஆகிய அறிகுறிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களில் சிலர் திடீர், திடீரென ஒலி எழுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன், எள்ளுரு மாவட்ட அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு, இந்த மர்ம நோய்க்கு இதற்கு குடிநீர் மாசுப்பாடே காரணம் என குற்றம் சாட்டினார். மேலும், எள்ளுரு மாவட்டத்தில் நடந்த நீர் மாசுபாடு காரணமாக ஆந்திரா முழுவதும் சுகாதார அவசரநிலையை பிரகனப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த பிரச்சனை ஆந்திர சுகாதாரத்துறையின் சீரழிவை காட்டுகிறது என விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது, ஆந்திர அரசு எள்ளுரு பிரச்னையை கையாளும் விதத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " ஆந்திர அரசு, எள்ளுரு சம்பவத்தை தவறாக கையாளும் விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த மர்மமான உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஸ்ரீதர் என்பவரின் உடல், அவரது குடும்பத்தாரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று இரவு திரும்பிவந்து, ஸ்ரீதரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யவேண்டுமென திரும்ப கேட்கின்றனர். ஆந்திரா அரசு எதை மறைக்க முயல்கிறது" என கேள்வி எழுப்பி, சுகாதாரத்துறை அதிகாரிகள் உடலை திரும்ப கேட்கும் விடீயோவையும் பதிவிட்டுள்ளார்.