பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் அவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அவரது இல்லத்தில் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அவர் திருட சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரை பார்த்ததும் சைஃப் அலி கான் அவருடன் சண்டையிட, அதில் அந்த மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திவிட்டு சென்றுள்ளார்.
பின்பு படுகாயமடைந்த சைஃப் அலி கான் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவருக்கு ஆறு இடங்களில் கத்தி குத்தப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு இடங்களில் ஆழமாக கத்திகுத்து இறங்கியுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அந்த இரண்டு இடங்களில் முதுகு தண்டுவடத்தின் அருகே ஒன்று இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சைஃப் அலிகான் உதவியாளர் காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நிலை குறித்து மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரபல நடிகருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தை காங்கிரஸ் கடுமையாக கண்டித்து விமர்சனம் செய்துள்ளது. மும்பை மாநகரில் யாருக்கும் பாதுகாப்பில்லை என சுட்டிக்காட்டி கண்டனத்தை தெரிவித்துள்ளது காங்கிரஸ்.