உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் ராமன் காஷ்யப் என்ற பத்திரிகையாளர் உட்பட மேலும் நால்வர் உயிரிழந்தனர். இதனையடுத்து மத்திய அமைச்சர் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 14 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வன்முறை குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. உச்ச நீதிமன்றத்திலும் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையே லக்கிம்பூர் வன்முறையில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல சென்ற பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச அரசு தடுப்புக்காவலில் வைத்திருந்தபோது, பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டாலும், மத்திய இணையமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவை கைது செய்யாவிட்டாலும் பஞ்சாப் காங்கிரஸ் லக்கிம்பூரை நோக்கி அணிவகுக்கும் என அறிவித்தார்.
இதன்பின்னர் உத்தரப்பிரதேச அரசு, பிரியங்கா காந்தியை விடுவித்தது. ஆனால் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து கடந்த வியாழனன்று (07.10.2021) சித்து தலைமையில் பஞ்சாப் காங்கிரஸ் தொண்டர்கள் லக்கிம்பூர் நோக்கி வந்தனர். இதனையடுத்து உத்தரப்பிரதேச எல்லையில் சித்து தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர் விடுவிக்கப்பட்ட சித்து, நேற்று வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் வன்முறையில் இறந்த பத்திரிகையாளர் ராமன் காஷ்யப்பின் வீட்டுக்குச் சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சித்து, அந்த வீட்டிலேயே மத்திய இணையமைச்சரை கைது செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்துவந்தார். வியாழன்று பஞ்சாபிலிருந்து லக்கிம்பூருக்கு புறப்படும்போதே சித்து, நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) மத்திய இணையமைச்சரின் மகன் கைது செய்யப்படாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜரானதையடுத்து சித்து தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார்.