காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான சித்தராமையா தன்னுடைய உதவியாளரை பொதுவெளியில் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் சித்தராமையா தனது கட்சியினருடன் மைசூர் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துவிட்டு அவர் திரும்பிய போது அருகில் இருந்தவர் சித்தராமையாவிடம் எதோ கூறினார். இதனால் கோபமடைந்த சித்தராமையா அந்த நபரின் கன்னத்தில் அறைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் ஒருவரை சித்தராமையா அறைந்த அந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவியது.
இதனையடுத்து பலரும் சித்தராமையாவின் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள சித்தராமையா, "ரவி, என் மகன் போன்றவர். நீண்டகாலமாக அவருக்கு நான் வழிகாட்டியாக இருந்து வருகிறேன். இதுபோன்று பலருக்கு நான் வழிகாட்டியாக இருக்கிறேன். அதனால் அக்கறையின் அடிப்படையில் பாசத்தையும் அதிருப்தியையும் அவர்கள் மீது எப்போதும் நான் வெளிப்படுத்துவேன். அப்படித்தான் அன்றும் நடந்தது" என தெரிவித்துள்ளார்.