இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், தடுப்பூசி ஆகியவை மக்களுக்குத் தடையின்றி கிடைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று (30.04.2021) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது, உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், பல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. கரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வேறு வேறு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கமளிக்குமாறும் கூறியது.
அரசாங்கமே அனைத்து தடுப்பூசிகளையும் வாங்கி, தேசிய நோய் தடுப்பு திட்டத்தின்படி தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஏன் தொடரக்கூடாது என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுகுறித்து யோசிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவது குறித்து கட்டாயம் மத்திய அரசு யோசிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து உச்ச நீதிமன்றம், எந்த மாநிலம் எவ்வளவு தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்பதை தடுப்பூசி தயாரிப்பாளர்கள் முடிவு செய்யுமாறு விட்டுவிட முடியாது என்றதோடு, மத்திய, மாநில அரசுகள் படிக்காதவர்களையும் இணைய வசதி இல்லாதவர்களையும் எப்படி தடுப்பூசிக்காக முன்பதிவு செய்ய வைக்கப்போகிறது? என கேள்வியெழுப்பியது.
ஆக்சிஜன், படுக்கைகள், மருத்துவர்கள் பற்றாக்குறை என சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது வதந்தி பரப்புவதாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும், அனைத்து காவல்துறை டி.ஜி.பிக்களுக்கும் உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளது.