ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அம்மாநிலத்தில் நேற்று (08.10.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், பா.ஜ.க 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை பெற்ற பா.ஜ.க, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த நயாப் சிங் சைனி, இம்முறையும் ஆட்சி அமைப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
அதே போல், ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின், முடிவுகள் நேற்று வெளியானது. அதில், தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்கள், காங்கிரஸ் 6 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் 1 இடங்கள் என மொத்தமாக 49 இடங்களை கைப்பற்றி அங்கு காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருப்பதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பார் என அக்கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஹரியானாவில் கிடைத்த முடிவுகள் குறித்து ஆலோசனை செய்து வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. மாநிலத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றி என்பது அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயக சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி.
ஹரியானாவின் எதிர்பாராத முடிவுகள் குறித்து நாங்கள் அலசி வருகிறோம். பல சட்டசபை தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம். ஆதரவு அளித்த ஹரியானா மக்கள் அனைவருக்கும், அயராத கடின உழைப்பை கொடுத்த எங்கள் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி. உரிமைகளுக்காகவும், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், உண்மைக்காகவும் இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம். தொடர்ந்து உங்கள் குரலை உயர்த்துவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.