இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என பாதுகாப்புத்துறை உயரதிகாரி அனில் பூரி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
நான்கு ஆண்டு பணியின்போது IAF அக்னி வீரர்களுக்குப் பிரத்தியேக சீருடை வழங்கப்படும். நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் அக்னி வீரர்கள் அவர்களின் சொந்த கோரிக்கையின் பேரில் பணியிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள். விதிவிலக்கான சில சூழல்களில் மட்டும் தகுதி வாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் அவர்கள் விடுவிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் வாழ்வாதாரம் என்ன எனக் கேள்விகளை முன்வைத்து போராட்டங்கள் எழுந்துள்ளது. அதேசமயம் அக்னிபத் திட்டத்தில் ஆள் சேர்க்கும் முறைக்கு மத்திய அரசு அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் அக்னிபத் திட்டத்தில் ஆள் சேர்க்கும் நடைமுறைக்கான முன்பதிவுகள் தொடங்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு மஹிந்திரா வேலை தருவதாக அந்நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது நான் கூறினேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன்-அக்னி வீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களைச் சிறந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.