குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட்டும் எதிர்க்கட்சியான காங்கிரசும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கிடையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டசபையில் தீா்மானம் நிறைவேற்றியதோடு அந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து உள்ளது. இது பாஜக மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போராட்டத்தின் போது பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறைகளை, முதல்வா் பினராயி விஜயன் கண்டித்து வன்முறைகளை தூண்டியவா்களை மறைமுகமாக குறிப்பிட்டு அவா்கள் களையெடுக்கப்படுவார்கள் என எச்சரித்தார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஜனநாயக வாலிபா் சங்க அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் வேறு எந்த வாசகமும் இல்லாமல் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநிலச் செயலாளா் ரகீம் இருவரையும் வீடு புகுந்து வெட்டிக் கொல்வோம் என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து ரகீம் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனா் பல்ராம்குமார் உபாத்யாவிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் மியூசியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.