கடந்த 24ம் தேதி வெளிவந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா தேர்தல் முடிவுகளால் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இரண்டு கட்சிகளும் அதிர்ச்சி அடைந்தன என்றால் அதில் ஆச்சரியமில்லை. அதற்கு காரணம் தேர்தலுக்கு முன்னர் வந்த கருத்துக்கணிப்புகளும், தேர்தல் முடிந்த பிறகு வந்த கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கு சார்பாக வந்ததே. அந்த வகையில் மராட்டியம், ஹரியாணாவில் அதிகப்படியான தொகுதிகளில் பாஜக வெற்றிபெரும் என்றும், குறிப்பாக மராட்டியத்தில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜக தரப்புக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
குறிப்பாக படுதோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்-என்.சி.பி கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்றது. 105 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் பதவியை அடைய வேண்டும் என்றால் சிவசேனாவிடம் சரணடைய வேண்டிய நிலை தற்போது பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது சிவசேனா என்சிபி மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க வியூகம் வகுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், வரும் 8ம் தேதிக்குள் மராட்டியத்தில் ஆட்சி அமைக்காவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது, " கூட்டணியில் சமமான பங்கு வேண்டும் என்பது தான் சிவசேனாவின் கோரிக்கை. 50:50 என்ற கோரிக்கையில் கட்சி உறுதியாக இருக்கிறது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை மிரட்டும் வகையில் பாஜக நடந்து கொள்கிறது. 8-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்பது மிரட்டல். அப்படி என்றால் குடியரசு தலைவர் உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா? மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கப்படாமல் இருப்பதற்கு யார் காரணம். யாருடைய சுயநலத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக தலைவர்கள் இந்த மாநிலத்தையும், மக்களையும் அவமானப்படுத்துகின்றனர் " எனக் கூறியுள்ளது.