நாங்கள்தான் உண்மையான ஐக்கிய ஜனதா தளம்!: சரத் யாதவ் தரப்பு தடாலடி
நாளை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தாங்கள் தான் உண்மையான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள், நாங்கள் தனியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவோம் என சரத் யாதவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் முதல்வர் நிதீஷ்குமார் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து, பாஜக கூட்டணியோடு இணைந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அன்றுமுதல் பீகார் அரசியல் சூழலில் வெப்பம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் செயல்வீரர்கள் கூட்டம், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் அலி அன்வர், ‘நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டம் நடக்கும் அதேவேளையில், நாங்கள் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவோம். நாங்கள் முதலில் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவே முடிவுசெய்திருந்தோம். ஆனால், தொடக்கத்தில் இருந்தே பலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதும், சரத் யாதவிற்கு மரியாதைக்குறைவை ஏற்படுத்தியிருப்பதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாங்கள் தனியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்த கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். நாங்கள் தான் ஐக்கிய ஜனதா தளம், நிதீஷ் தலைமையிலானது பாஜக ஜேடியூ’ என்றார். மேலும், கட்சியின் பெயரையும், சின்னத்தையும் மீட்பதற்காக தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்