ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இன்று (15-10-24) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது. வரும் நவம்பர் 26ஆம் தேதியுடன் மகாராஷ்டிரா சட்டப்பேரவை பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா தேர்தலில், காங்கிரஸ், சிவசேனா( உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் ( சரத்பவார் பிரிவு) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது. அதே போல், ஆளும் பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளன.
சிவசேனா கட்சியில் இருந்த ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் பவாரும் கட்சியில் இருந்து விலகி, ஆதரவு எம்.எல்.ஏக்களோடு பா.ஜ.கவில் இணைந்து ஆட்சி அமைத்தனர். அவர்களை வீழ்த்துவதற்காகவும், தங்களது கட்சியை மீட்டெடுப்பதற்காகவும் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று வெளியாகும் சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்சந்திர பவார் பிரிவு தலைவர் சரத் பவார் கூறியதாவது, “சில சிறுவர்கள் கைகளில் பலகைகளுடன் நின்று கொண்டிருந்தனர். அதில் எனது புகைப்படம் இருந்தது. அதில், ‘84 வயதானவர்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கவலைப்பட வேண்டாம், நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். இந்த முதியவர் நிறுத்த மாட்டார். எனக்கு 84 அல்லது 90 வயதாகிவிட்டாலும், மகாராஷ்டிராவை சரியான பாதையில் கொண்டு செல்லும் வரை இந்த முதியவர் நிறுத்தமாட்டார்” என்று கூறினார்.