![Two people lost their live of dengue fever in Puducherry](http://image.nakkheeran.in/cdn/farfuture/Brn_67ASFOf6XOFeikTX1PQ_YFdUc3rPIQTVBodT8Gc/1694616524/sites/default/files/inline-images/a1474.jpg)
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவகால காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி புதுச்சேரி குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி காயத்ரி (17) காய்ச்சல் காரணமாக, மூலகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜிப்மர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி, தருமபுரி, நடுத்தெருவைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் மீனாரோஷினி (28) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண் என இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரி அரசு பருவ வியாதிகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும், மக்களை காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.