தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா மற்றும் தேசிய அரசியலில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். மேலும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளம் மூலம் ஒருவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சரத்பவார் மகள் சுப்ரியா சுலே எம்.பி தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நேற்று மும்பை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தனர். அந்த புகாரில், "தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு சமூக வலைத்தளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சமூக செயற்பாட்டாளர் மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான நரேந்திர தபோல்கருக்கு ஏற்பட்ட அதே கதி விரைவில் சரத் பவாருக்கு ஏற்படும் என்று அந்த மிரட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர். மேலும் கொலை மிரட்டல் குறித்த ஆதாரங்களையும் போலீசிடம் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தரப்பு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பிக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனக்கும் நேற்று முதல் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன. அந்த அழைப்பில் பேசியவர்கள் காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேச வேண்டாம் என மிரட்டினர். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் மற்றும் மாநில உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷில்பா போட்கே கொலை மிரட்டல் ஆடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், "சஞ்சய் ராவத் தனது செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் அவர் சுட்டுக் கொல்லப்படுவார். ஒரு மாதத்திற்குள் சஞ்சய் ராவத் மற்றும் அவரது சகோதரர் சுனில் ராவத் இருவரையும் சுடுகாட்டுக்கு அனுப்புவேன்" என்று மர்ம நபர் கூறியுள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நேரத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த இரு முக்கியத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.