Skip to main content

மிஷன் 2024: இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டும் சரத் பவார் - திமுக பங்கேற்பதாக தகவல்!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

sharad pawar

 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தித்தனர். தேசியவாத காங்கிரஸுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக பிரசாந்த் கிஷோர் கூறினார். இருப்பினும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

 

இந்தநிலையில், நேற்று (21.06.2021) மீண்டும் சந்தித்துக்கொண்டனர். இதில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

 

இந்த ஆலோசனைக்குப் பிறகு சரத் பவாரும், அண்மையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த மூத்த அரசியல் தலைவர் யஸ்வந்த் சின்ஹாவும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் என சுமார் 15 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், எத்தனை கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

 

காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்களுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. திமுக சார்பாக இக்கூட்டத்தில் திருச்சி சிவா பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலில், பாஜகவிற்கெதிராக வலுவான கூட்டணியை அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் பாடலாசிரியர், பத்திரிகையாளர், முன்னாள் தேர்தல் ஆணையர் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்