நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென பாஜக ஆட்சியமைத்தது.
மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “பாஜகவுடன் கூட்டணி என்பது, அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. அதேபோல அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை" என தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மகாராஷ்டிரா அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்ரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், "பாஜகவுக்கு ஆதரவு என்பது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ள அஜித் பவார் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடியால் அஜித் பவார் இந்த முடிவை எடுத்தாரா என்பது தெரியவில்லை. அவருக்கு பதில் தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். சிவசேனா தலைமையில் அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம்" என தெரிவித்தார்.