சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த கேரள மாணவி ஒருவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செமஸ்டர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். சொந்த ஊர் திரும்பியிருந்த அவருக்கு சில நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 30 ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் முதன்முதலில் கரோனா உறுதி செய்யப்பட்டது இவருக்குத்தான்.
அதன்பிறகு அந்த மாணவி, திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று வாரங்கள் சிகிச்சையளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கரோனாவிலிருந்து மீண்ட அவர் கடந்தாண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் கரோனா உறுதியாகியுள்ளது. படிப்பு விஷயமாக டெல்லி செல்ல திட்டமிட்ட அவர், அதற்காக கரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த மாணவிக்கு நடத்தப்பட்ட ஆர்டி-பிசிர் சோதனையில், கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள திருச்சூர் மாவட்ட மருத்துவ அதிகாரி கே ஜே ரீனா, மாணவிக்கு அறிகுறிகளற்ற கரோனா ஏற்பட்டுள்ளதாகவும், ஆன்டிஜென் சோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.