இந்தாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளின் போது மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (03-02-25) நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்றது. அதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர், “5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் இரும்பு பயன்பாடு இருந்தது. இரும்புப் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவை மத்திய அரசு இன்று வரை அங்கீகரிக்காதது ஏன்?. உலகிலேயே முதலில் இரும்பை பயன்படுத்தியது தமிழர்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. திராவிட பண்பாட்டின் பெருமையை மத்திய அரசு இழக்கிறது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது. நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை, மிரட்டப்படுகின்றனர்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத் எனும் பெயரில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களைச் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒதுக்கிறீர்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அதற்கு, இந்து சமூகம் சிறுபான்மையாகிவிடும் என்று காரணம் சொல்கிறீர்கள். இந்தியாவில் 14% இஸ்லாமிய சமூகம் இருக்கிறது. ஆனால், 80% இந்து சமூக மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் விரும்பும் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ உரிமை இருக்கிறது. அவர்களை அவர்களது வாழ்க்கையை வாழ விடுங்கள்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதள் அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடந்தன. அரசியல் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தால், ‘ஆண்டி இண்டியன்’ என்கிறார்கள்” என்று பேசினார்.