'பெரியார் இல்லையேல் நாம் ஏது? பெரியார் குறித்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தில் ஈட்டியை சொருகியது போல உள்ளது' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ''மூடநம்பிக்கைகளை ஒழிக்க பெரியார் இங்கு போராடியதோடு மட்டுமல்லாமல் வைக்கத்தில் போராடினார். நம்முடைய முதல்வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனும் அந்த திறப்பு விழாவை நடத்தினார்கள். இந்த சந்தர்ப்பத்தில் தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசுகின்றவர்களை நான் இந்த புனிதமான இடத்தில் பெயர் சொல்லி குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் பெரியார் இல்லையேல் நாம் ஏது? பெரியார் இல்லையேல் இன்று இருக்கக்கூடிய அதிகாரிகள்; இன்று பல துறைகளில் இருந்து கொண்டிருக்கக் கூடிய அனைவரும் பெரியாருக்கு கடமைப்பட்டவர்கள். கடைசி நிலையில், கடைசி கூட்டத்தில் அவர் தியாகராய நகரில் சொன்னார் 'டெல்லி காரனுக்கு இங்கே என்ன வேலை? உன் மொழி வேறு எங்கள் மொழி வேறு; உன் சாப்பாடு வேறு எங்கள் சாப்பாடு வேறு; உன் கலாச்சாரம் வேறு எங்கள் கலாச்சாரம் வேறு; ரகளை வேண்டாம் மரியாதையாக வடக்கே ஓடிப் போய்விடு'' என்று பேசியிருந்தார் பெரியார்.
தமிழர் தந்தை ஆதித்தனார் தஞ்சையில் தமிழ்நாடு பிரிவினை மாநாடு நடத்திய போது தந்தை பெரியார் அதை திறந்து வைத்துவிட்டு இனி ஆதித்தனாருக்கு பக்கபலமாக என்றும் இருப்பேன் என்று பெரியார் அந்த கூட்டத்தில் பேசினார். 6,000 திராவிட கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தார்கள். அவர் வசதி படைத்தவர் தான். ஆனால் அத்தனையும் கட்சிக்கு தான் தந்தார். அவர் வசூலித்த பணம் மட்டுமல்ல அவர் பூர்வீக சொத்துக்களை அவர் திராவிடர் கழகத்திற்கு தான் தந்தார். அப்படிப்பட்ட அறிவாசான் தந்தை பெரியாரை நெஞ்சிலே பூசிக்கின்ற எங்களுக்கு ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தில் ஈட்டியை சொருகியது போல பெரியாரைப் பற்றி இவ்வளவு காலம் யாரும் பேசத் துணியவில்லை. நாங்கள் அமைதியாக இருக்கிறோம். எந்த கலகமும் கூடாது; எந்த வன்முறையும் கூடாது என்ற வகையில் இருக்கிறோம். இளைஞர்கள் பெரியாரைப் பற்றி இப்பொழுது படிக்கிறார்கள். தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அறிஞர் அண்ணா இல்லையேல் இந்த தமிழகம் இல்லை. அண்ணாவும் பெரியாரும் நிலைத்து வாழ்வார்கள்''என்றார்.