Skip to main content

“நான் பிரதமரைக் குறை கூறவில்லை” - மக்களவையில் ராகுல் காந்தி

Published on 03/02/2025 | Edited on 03/02/2025
Rahul Gandhi replies to Motion of Thanks on the President's Address

இந்தாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளின் போது மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (03-02-25) நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்றது. அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது, “ஜனாதிபதியின் உரையின் மூலம் எனது கவனத்தைத் தக்கவைக்க நான் போராடினேன், ஏனென்றால் கடந்த முறையும் அதற்கு முந்தைய நேரமும் அதே ஜனாதிபதியின் உரையை நான் கேட்டிருந்தேன். அரசு செய்த காரியங்களின் அதே சலவை பட்டியல்தான். குடியரசுத் தலைவர் உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை. புதிதாக ஒன்றும் இல்லை, குடியரசுத் தலைவர் உரை என்பது இப்படி இருக்கக் கூடாது. நடந்ததையே திரும்பச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்தியா கூட்டணி அரசில் குடியரசுத் தலைவர் உரை எப்படி இருக்க வேண்டுமென எண்ணுகிறேன். 

நாட்டின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே உள்ளதி. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சனை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ அல்லது இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசோ இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து தெளிவான பதிலை அளிக்கவில்லை. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைப் பிரதமர் முன்மொழிந்தார், அது நல்ல யோசனை என்று நினைக்கிறேன். இதன் விளைவு உங்களுக்கு முன்னால் உள்ளது, 2014 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3% ஆக இருந்த உற்பத்தி, இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.6% ஆகக் குறைந்துள்ளது. இது 60 ஆண்டுகளில் உற்பத்தியின் மிகக் குறைந்த பங்காகும். நான் பிரதமரைக் குறை கூறவில்லை, அவர் முயற்சிக்கவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. பிரதமர் முயற்சி செய்தார், ஆனால் அவர் தோல்வியடைந்தார் என்று என்னால் கூற முடியும். உற்பத்தித் துறை சரியான அளவில் ஊக்குவிக்கப்படவில்லை. நுகர்வை மட்டுமே அம்பானி, அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. 

மக்கள் ஏஐ பற்றி பேசுகிறார்கள், ஆனால் ஏஐ என்பது முற்றிலும் அர்த்தமற்றது என்பதை புரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால் ஏஐ, தரவுகளின் மேல் இயங்குகிறது. தரவு இல்லாமல், ஏஐ என்பது ஒன்றுமில்லை. இன்று பூமியில் உள்ள அனைத்து எலெக்ட்ரானிகஸ்களையும், தயாரிக்க பயன்படுத்தும் தரவு சீனாவிற்கு சொந்தமானது, நுகர்வு தரவு அமெரிக்காவிற்கு சொந்தமானது.  இந்தியாவை விட சீனா 10 ஆண்டுகள் முன்னிலை வகிக்கிறது. சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள், ஒளியியல் ஆகியவற்றில் வேலை செய்து வருகிறது. உலகம் வேகமாக மாறி வருகிறது. போர், மருத்துவம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ட்ரோன்கள், மின்சார மோட்டார், பேட்டரிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். ட்ரோன்கள், பேட்டரிகள் உற்பத்தியை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்