ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள மாச்சர்லா பேருந்து நிலையத்தில், 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சோகமாக அமர்ந்திருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரிடம் விசாரித்தபோது, “நான் சில நாட்களுக்கு முன்னர் கோவாவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று வந்தேன். எனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தொற்று உறுதி செய்யப்பட்டதால், எனது மகன் இங்கே கொண்டுவந்து, விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறிவிட்டான். அதனால், எங்கே செல்வது என்று தெரியாமல் இங்கே காத்திருக்கிறேன்..” என்று புலம்பியிருக்கிறார்.
இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ‘முழு தேசமும் கரோனாவுக்கு எதிராகப் போராடுகிறது. நீங்கள் நோயாளிகளிடம் பாகுபாடு காட்டாதீர்கள். அவர்களை ஒதுக்காதீர்கள்..!’ என்று மத்திய-மாநில அரசுகள் விளம்பரம் செய்கின்றன. ஆனால், நிஜத்தில் என்ன நடந்திருக்கிறது? பெற்ற தாயையே ஒதுக்கி வைத்துவிட்டான், ஒரு கல்நெஞ்சக்கார மகன்!
கரோனா, இன்னும் என்னென்ன கொடுமைகளை அரங்கேற்றவிருக்கிறதோ?