Skip to main content

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்; பக்தர்கள் அதிர்ச்சி 

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

One more leopard move on the turn Devotees are shocked

 

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்று ஆறு வயது சிறுமி பெற்றோருடன் கடந்த 11 ஆம் தேதி இரவு திருப்பதி மலைக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுத்தை அல்லது வனவிலங்குகள் ஏதேனும் இழுத்துச் சென்றிருக்கலாம் என அச்சமடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக மகள் காணாமல் போனது குறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இரவு முழுக்க வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் வனத்தின் பல பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

 

தொடர் தேடுதலுக்குப் பிறகு நேற்று முன்தினம் காலை அலிபிரி வழி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. உடல் கிடந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்,  திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி வெளியிட்ட இருந்த அறிவிப்பில், 'திருமலை நடைபாதையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். வனவிலங்கு தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பலகட்ட நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுக்கும். திருமலை நடைபாதையில் ஒவ்வொரு 40 அடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

மேலும் சிறுமியைக் கொன்ற வனவிலங்கைப் பிடிக்க வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். வன விலங்கைப் பிடிக்க 2 இடங்களில் கூண்டும், வன விலங்கைக் கண்காணிக்கும் பொருட்டு 30 இடங்களில் நைட் விஷன் கேமராக்களும் பொருத்தி இருந்தனர். இந்நிலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை, வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியுள்ளது. பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

One more leopard move on the turn Devotees are shocked

 

இந்நிலையில் திருப்பதி நடைபாதை அருகே மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர். இன்று மலைப் பாதையில் பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது பக்தர்களின் பார்வையில் மற்றொரு சிறுத்தையின் நடமாட்டத்தைப் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். இதனால் சிறுத்தை அங்கிருந்து தப்பி காட்டிற்குள் ஓடியுள்ளது. முன்னதாக திருப்பதி மலைப் பாதையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாத யாத்திரை செல்லத் தடை விதித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்