பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி ஈரோடு பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் பிப்ரவரி 3 மூன்றாம் தேதி இன்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரோடு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ''சீமான் என்பவர் 2008 எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்ததாகவும் அப்போது அவர் உபதேசம் வழங்கியதாகவும் அதற்குப் பின்னர் தான் திராவிடர்கள் திருடர்கள் என தெரிய வந்ததாகவும் அதுவரை தெரியாமல் போனதாகவும் மேடைகளில் பேசி வருகிறார். 2008இல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010 ஆம் ஆண்டு பெரியார், எம் ஜி ஆர் கட்டவுட்டுகளை மேடையிலே வைத்து மாபெரும் விழா எடுத்தது ஏன்? உபதேசத்திற்கு பின்னால் அவர்கள் திருடர்களாக தெரியவில்லையா? எப்படி எல்லாம் மக்களை சீமான் ஏமாற்றுகிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு'' என அந்த விழா எடுத்த படத்தை நிருபர்கள் மத்தியில் காட்டி அவர் பெரியாரை புகழ்ந்து பேசியதையும் ஒலிபெருக்கி மூலம் போட்டு காண்பித்தார்.
''எல்டிடிஇ பிரபாகரன் கடவுளை நம்புவதில்லை. இயற்கையை தான் நம்புகிறோம் என்று சொல்கிறார். அவரின் வலது கரமாக இருந்த கிட்டு அவர்கள் நாங்கள் அனைவரும் திராவிடர்கள் தான். ஆரியர்கள் எங்கள் எதிரிகள். ஆரியர்களை ஒழித்த தந்தை பெரியார் தான் திராவிட இயக்கத்தையும் தமிழர்களையும் வாழ வைத்தவர்' என்று கூறிய ஒலி நாடாவையும் போட்டு காண்பித்தார். மேலும் சீமான் அவரது உயிர் உள்ளவரை பார்ப்பனர் யாரும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக முடியாது என மேடையில் பேசியதையும் ஒலி பெருக்கி மூலம் போட்டு காண்பித்தார்.
''தேர்தல் முடிந்த பின்னால் தமிழக முதல்வர் சீமான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்கள் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்ட ஈரோட்டு மண்ணில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்து உங்களை சந்தித்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியாரை இழிவு படுத்தும் சீமானுக்கு ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நிருபர் 'எப்பொழுது சீமான் நாம் தமிழர் கட்சியை தடை செய்வார்கள்' என கேட்டார். ''அமைதி பூங்காவாக விளங்கும் ஈரோடு மண்ணில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வெடிகுண்டு வீசுவதாகவும் தலைவர் கொடுத்த வெடிகுண்டு கையில் இருப்பதாகவும், வீசிய பின்னர் புல் கூட அந்த இடத்தில் முளைக்காது என்றும் தமிழக முழுவதும் தீப்பற்றி எரியும் என்றும் கொலை வெறியில் இருக்கிறேன் என்றும் அவர் பேசிய பேச்சுகளில் இருந்து தப்பவே முடியாது. ஆகவே விசாரணை நடத்தி தேர்தல் ஆணையம் அவர் கட்சிக்கு கொடுத்திருக்க அங்கீகாரத்தை திரும்ப பெரும். தடை செய்யும். நிச்சயமாக அது நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்'' என கூறினார்.
'எடப்பாடி பழனிசாமி ஏன் பெரியாரை தாக்கி பேசியதற்கு சரியான கண்டனத்தை தரவில்லை' என நிருபர்கள் கேட்டதற்கு ''அவருக்கு பெரியாரைப் பற்றி தெரியாது. பெரியாரைப் பற்றி தெரிந்த செல்லூர் ராஜு, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்'' என்றார். மேலும் 'ஓபிஎஸ் ஏன் இதை பற்றி பேசவில்லை' என்று கேட்டதற்கு ''அவருக்கு டெல்லியில் இருந்து அனுமதி வந்தால் இதனைப் பற்றி பேசுவார். அதுவரை பேசமாட்டார்'' எனக் கூறினார்.
''பாரதிய ஜனதா கட்சி ஆதரவு சீமானுக்கு இருந்தால் ஏன் வெளிப்படையாக அண்ணாமலை ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆகவே எந்த கட்சி ஆதரவும் சீமானுக்கு இடைத்தேர்தலில் இல்லை. அனாதையாக நிற்கின்ற காட்சியை தான் பார்க்கிறோம்'' எனவும் கூறினார்.
''விஜய் அரசியலுக்கு வந்த பின்னால் ஏற்பட்ட பயம்தான் சீமானுடைய இன்றைய நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வருவதை நாம் தடுக்க முடியாது. அவர் பெரியார் வழியில் வருவதால் அவரை நான் பாராட்டுகிறேன். சீமானுக்கு விஜய்யை பார்த்து நடுக்கம் ஏற்பட்டு விட்டது .அதன் எதிரொலியாக தான் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார். சீமான் விஜயைப் பார்த்து பயப்பட ஆரம்பித்து விட்டார்'' என்றார்.