நம் நாட்டில் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும், பாதாளச் சாக்கடையில் இறங்கி விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதை முழுவதுமாக தடுத்து நிறுத்த கேரள அரசு ரோபோ ஒன்றை பயன்படுத்த முடிவு செய்து அதற்கான வேலைகள் கடந்த சில மாதங்களாக நடந்துவந்தன. தற்போது அந்த ரோபோவின் சோதனை ஓட்டங்கள் முடிந்து பொதுப்பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
ஜென்ரோபோட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோவிற்கு ‘பெருச்சாளி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை திருவனந்தபுரத்தில் 5 ஆயிரம் பாதாளச் சாக்கடைகளில் சோதனை செய்து பார்த்ததில், அனைத்திலும் வெற்றி அடைந்துள்ளது. இந்த ரோபோவுக்கான மொத்த செலவையும் கேரள அரசு எற்றுக்கொண்டுள்ளது. உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிப்பதே நம் நோக்கம் என கேரள நீர் ஆணையத்தின் மேலாளர் ஷைனாமோல் தெரிவித்துள்ளார்.
ப்ளூடூத், வை-பை, கண்ட்ரோல் பேனல் உள்ளிட்ட கட்டுப்படுத்தும் சாதனங்களும், கழிவுகளை அள்ள வாளி, துடுப்பு போன்ற பொருட்களும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோவை 9 இளைஞர்கள் கொண்ட குழுதான் தயாரித்துள்ளது.
மலக்குழி சாவுகளுக்கு முடிவு கட்ட இருக்கும் இந்த பெருச்சாளி ரோபோ, வரும் மார்ச் 2ஆம் தேதி ஆற்றுக்கால் பகவதி கோவில் பொங்கல் தினத்தன்று பணியைத் தொடங்கவுள்ளது.