ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி, மும்பையின் கம்பல்லா ஹில் பகுதியில் ‘ஆன்டிலியா’ என்று அழைக்கப்படும் ஆடம்பரமான இல்லத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே, சந்தேகத்துக்குரிய கார் ஒன்று நின்றது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்தக் காரை சோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் 20 கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரிலிருந்து கடிதம் ஒன்றும், சில நம்பர் பிளேட்டுகளும் கைப்பற்றப்பட்டன. இந்த நம்பர் பிளேட்டில் ஒன்று, முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனத்தின் நம்பர் பிளேட்டோடு ஒத்துப்போவதாகப் போலீஸார் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், பிப்ரவரி 25ஆம் தேதி இரவு ஒருமணிக்கு இரண்டு கார்கள் அப்பகுதிக்கு வருவதும், ஒருவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே ஒரு காரை நிறுத்திவிட்டு, இன்னொரு காரில் ஏறிச் செல்வதும் பதிவாகியிருந்ததாக போலீஸார் கூறினர்.
இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர், அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளரைக் கண்டுபிடித்தனர். மன்சுக் ஹிரென் என்ற அந்த உரிமையாளர், தனது கார் முன்னரே காணாமல் போய்விட்டதாகக் கூறியிருந்தார். மேலும், அவர் கார் காணாமல் போனது குறித்து முன்னரே புகாரளித்திருந்தார். இந்தநிலையில், கடந்த ஐந்தாம் தேதி, மன்சுக் ஹிரென் தானேவில் உள்ள கல்வா கால்வாய்ப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதனால் அம்பானி வீட்டின்முன் வெடிபொருட்கள் நிறைந்த கார் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் மேலும் பரபரப்பாகியது. தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட மன்சுக் ஹிரென் மரணம் குறித்து மஹாராஷ்ட்ரா பயங்கரவாத தடுப்புப் படை, கொலை, கிரிமினல் சதி மற்றும் ஆதாரங்களை அழிக்க முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. மேலும் அம்பானி வீட்டின் அருகே நின்ற காரிலிருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்து வரும் தேசியப் புலனாய்வு முகமை, சச்சின் வேஸ் என்ற மஹாராஷ்ட்ரா மாநில காவல்துறை அதிகாரியை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமையன்று (15.03.21) தேசிய புலனாய்வு முகமை மெர்சிடிஸ் கார் ஒன்றைப் பறிமுதல் செய்தது. இந்தக் கார் சச்சின் வேஸால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பொய்யான நம்பர் பிளேட் கொண்ட அந்தக் காரிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் பணம், பணத்தை எண்ணும் இயந்திரம், ஆவணங்கள், பீர் பாட்டில்கள் ஆகியவைக் கண்டெடுக்கப்பட்டன. இந்தநிலையில் சச்சின் வேஸை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வெடிபொருட்கள் நிரம்பிய காரை சச்சின் வேஸ்தான் அம்பானி வீட்டிற்கு அருகே அழைத்து வந்ததாகவும், அப்படி அழைத்து வர அவர் தனது போலீஸ் வாகனமான இன்னோவாவைப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளது. மேலும் அம்பானி வீட்டருகே வெடிபொருட்கள் நிரம்பிய காரை நிறுத்தும் சி.சி.டி.வி காட்சியில் பதிவான நபரும் சச்சின் வேஸ்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் கார் நின்ற சம்பவத்தில் பரபரப்பு ஏறிக்கொண்டே செல்கிறது.