’ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி வந்த சுஜாத் புஹாரி அடையாளம் தெரியாத நபர்களால் ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று மாலை 7.30 மணி அளவில் இஃப்தார் நிகழ்ச்சிக்காக பிரஸ் காலனியில் இருக்கும் தனது அலுவலகத்திலிருந்து கிளம்பிய போது அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் சரமாரியாக சுடப்பட்டு இருக்கிறார். அவரின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஓட்டுனர் ஆகியோர் அந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
கடந்த 2000 ஆண்டு முதல் பத்திரிகையாளர் புஹாரிக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கபட்டு வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவ தொடர்ந்து பல்வேறு கூட்டங்களை நடந்தி வந்திருக்கிறார். சுஜாத் புஹாரியின் மறைவுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.