
புதுச்சேரி மாநிலம் குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். லாரி டிரைவரான இவர், ஆனந்த குமார் என்பவரிடம் சரக்கு லாரி ஓட்டும் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவர் கடந்த 17ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து சோப்பு ஆயில் ஏற்றிக்கொண்டு சேலம் செல்வதற்காக லாரியை ஓட்டி வந்துள்ளார். ஆனால் 17ஆம் தேதி புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட சரக்கு லாரி இரண்டு நாட்கள் கடந்தும் சேலத்திற்கு சென்று சேரவில்லை. லாரி என்ன ஆனது? டிரைவர் என்ன ஆனார்? என்பது குறித்து லாரி கம்பெனி மேலாளர் ஆனந்தகுமார் பல்வேறு வழிகளில் தொடர்புகொண்டு முயற்சி செய்தும் லாரி பற்றியும் டிரைவர் கதிரேசன் பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து லாரியின் மேலாளர் ஆனந்தகுமார் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் லாரியைத் தேடும் பணியில் ஈடுபட்டார். இந்தநிலையில், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் உள்ள செங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே அந்த லாரி கடந்த இரண்டு நாட்களாக கேட்பாரற்று நின்றுகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை ஆய்வு செய்வதற்காக திறந்து பார்த்தபோது பின்சீட்டில் டிரைவர் கதிரேசன் சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்திருந்தது. இதுகுறித்து மேலாளர் ஆனந்தகுமார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி மணிமொழியன், சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று டிரைவர் கதிரேசன் உடலைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். லாரி டிரைவர் கதிரேசன் மாரடைப்பு காரணமாக லாரியிலேயே உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஓடும் லாரியில் அதன் டிரைவர் இறந்து கிடந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.