Skip to main content

பெகாசஸ் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் வழக்கு!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

hindu ram and asianet sashi kumar

 

உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்தப் பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வுசெய்த ஊடகங்கள் தெரிவித்தன.

 

இதனையடுத்து, இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேநேரத்தில் இந்த ஊடக செய்திகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி எனவும், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே நேற்று (26.07.2021), மேற்கு வங்க முதல்வர் மம்தா, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு பேர் கொண்ட ஆணையத்தை அமைத்தது.

 

இந்தநிலையில், மூத்த பத்திரிகையாளர்கள் இந்து என். ராம், ஏசியாநெட் சசிகுமார் ஆகிய இருவரும், பெகாசஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்