
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழா நாளை(12.3.2025)மற்றும் நாளை மறுநாள்(13.3.2025) ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது.
அய்யனார் கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள ஆசியாவில் உயரமான 33 அடி உயர வெள்ளைக் குதிரை சிலைக்கு 36 அடி உயரத்தில் பூ மாலைகள் மற்றும் காகிதப் பூ மாலைகள் அணிவிப்பது தான் திருவிழாவின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் குதிரை கழுத்தில் மலை போல் மாலைகள் குவிந்துவிடுகிறது. இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க ஒரு நாள் முன்னதாகவே குதிரை சிலைக்கு மாலைகள் அணிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கி விடுகிறது.
கடந்த ஆண்டு திருப்பணிகள் நடந்ததால் குதிரை சிலைக்கு மாலைகள் அணிவிப்பு நிகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதால் இந்தாண்டு மாலை அணிவிப்பு நிகழ்வில் கூடுதலாக மாலைகள் வரலாம் என்றும், நாளை மாசிமகம் என்பதால் இன்று காலையிலேயே மங்கல வாத்தியங்கள் முழங்க, சிறப்பு வழிபாடுகளுடன் கிராம மக்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பூ மாலை முறைப்படி முதல் மாலையாக அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் குடும்பத்தினரின் பூ மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் லாரி, கார்களில் ஏற்றி வந்த பூ மற்றும் காகிதப் பூ மாலைகளை குதிரை சிலைக்கு அணிவித்து வருகின்றனர். இன்று காலை முதல் மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் காகிதப் பூ மாலைகளை லாரி, சரக்கு வாகனங்களில் ஏற்றி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கார், வேன்களுக்குள் காகித பூ மாலைகளை எடுத்து வந்து அணிவித்து வருகின்றனர். மழையில் மாலைகள் நனைந்து எடை அதிகரித்துவிடுவதால் உடனுக்குடன் மாலைகள் அகற்றப்பட்டும் வருகிறது. தொடர் மழையால் காகிதப் பூ மாலைகள் அணிவிக்கும் பக்தர்கள் மாலைகளை கொண்டு வர முடியாமல் தாமதித்து வருகின்றனர்.
இந்த ஆண்டும் சுமார் 3 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு அணிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.