கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனைக் குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதுவரை தமிழகத்தில் 124 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடாகாவில் இந்த எண்ணிக்கை அதிகிரித்து வருகின்றது. கேரளாவில் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கர்நாடகாவிலும் இந்தப் பாதிப்பு என்பது அதிகமாக இருக்கின்றது. பலர் தனிமைப்படுத்தப்படுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை செல்பி எடுத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மொபைல் செயலி மூலம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவ கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.