கவர்ச்சி நடனத்திற்காக பயன்படுத்தப்பட்ட அரசு பள்ளி!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில், ஊர்ப் பெரியவரின் மகன் பிறந்தநாளன்று அரசுப்பள்ளி கவர்ச்சி நடனத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மிர்சாப்பூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் ரக்ஷா பந்தன் தினத்தன்று ஊர்ப்பெரியவர் ஒருவரின் மகனின் பிறந்த தினம், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக பெண்கள் வரவழைக்கப்பட்டு, அனைவரின் மத்தியிலும் நடனமாட வைக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய பின்னர் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர், ரக்ஷா பந்தன் தினத்திற்காக விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த சூழலில் பள்ளியின் சாவியை யாரோ வாங்கியிருக்க வேண்டும். நாங்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்து பார்த்தபோது, வகுப்பறை முழுவதும் குப்பைகள் நிறைந்து கிடந்தன என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி கல்வி நிர்வாகத்தின் சார்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அரசுப் பள்ளியை கவர்ச்சி நடனத்திற்காக ஊர்ப் பெரியவர் பயன்படுத்திய சம்பவம் அப்பகுதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- ச.ப.மதிவாணன்