பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
எல்.ஐ.சி.யின் பொதுப்பங்குகளை விற்பனை செய்து, அதன் மூலம் சுமார் 60,000 கோடி ரூபாய் நிதி திரட்ட போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பொதுப்பங்கு வெளியீட்டுக்கான வரைவு அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம், அந்நிறுவனம் செபியிடம் தாக்கல் செய்தது. இந்த நிலையில், வரைவு அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்ட 22 நாட்களில் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, பங்குச்சந்தைகள் நிலையற்ற தன்மையில் காணப்பட்டதால், எல்.ஐ.சி. பொதுப்பங்கு வெளியீடு, அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப்போகும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது செபி ஒப்புதல் அளித்துள்ளதால், அதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.