கர்நாடகா மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸின் இந்த வெற்றி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ.கவுடன் இணையப் போவதாக அடிக்கடி தகவல்கள் வந்து கொண்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன. கூட்டணி குறித்து விவாதிக்க முன்னாள் பிரதமர் தேவகவுடா செப்டம்பர் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். ஜனதா தள கட்சிக்கு 4 நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி மற்ற 24 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடும்” என்று கூட்டணியை உறுதி செய்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது என்பது கட்சியின் முடிவல்ல என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இப்ராஹிம், “பா.ஜ.க.வுடன் ஜனதா தளம் கூட்டணி வைப்பது என்பது கட்சியின் முடிவல்ல. குமாரசாமியின் தனிப்பட்ட முடிவு. உடல்நிலை சரியில்லாத அவரது தந்தை தேவுகவுடாவை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்குமாறு குமாரசாமி கட்டாயப்படுத்தியுள்ளார். நான்தான் ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர். பா.ஜ.க.வைத் தவிர யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நாங்கள் தான் முடிவு செய்வோம்” என்று கூறியிருந்தார். இது கர்நாடகா அரசியலில் மட்டுமல்ல, ம.ஜ.கவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ம.ஜ.க கர்நாடகா மாநிலத் தலைவர் பதவியில் இருந்து இப்ராஹிம் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா வெளியிட்டுள்ளார். இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேவுகவுடா, ஜனதா தளம் கட்சியின் தற்காலிக மாநிலத் தலைவராக முன்னாள் முதல்வர் குமாரசாமி செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.