உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. கல்லூரி தேர்வுகள் அனைத்து மாநிலங்களிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி 10 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான பாடத்தை சில பள்ளிகள் இணையம் வழியாக மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். குஜராத்தில் தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு இணையம் வழியாக பாடம் நடத்துவதோடு, ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது மாணவர்கள் வீட்டில் இருந்தாலும் யூனிபார்ம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தற்போது சர்ச்சை ஆகி உள்ளது. பலரும் குஜராத் பள்ளி கல்வித்துறையின் கவனத்துக்கு இதை கொண்டு செல்வவே அந்த அந்த உத்தரவை அந்த பள்ளி தற்போது வாபஸ் பெற்றுள்ளது.