தமிழகத்திற்கும், கர்நாடாகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாக பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடைபெற்று வருகிறது. நேற்று (14-12-23) மேல்சபையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் பா.ஜ.க உறுப்பினர் என்.ரவிக்குமார், மேகதாது திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், “நமது நீர், நமது உரிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் நம்மை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்மை கிடைக்கும்.
நமக்கு 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்த திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினாலும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். மாண்டியா, மைசூரு, பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியாது.
அதனால், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். இதற்கு பா.ஜ.க.வும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தால் காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனால், நமக்கும் நெருக்கடியான நிலை வராது. கர்நாடகாவில் இந்த வருடம் கடுமையான வறட்சி ஏற்பட்ட போதிலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமலும், பயிர்களை பாதுகாக்கவும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட்டோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் பின்பற்றினோம். மேகதாது திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கீழ்மட்டத்திலேயே பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, கர்நாடகா அனைத்துக்கட்சி எம்.பிக்களை உள்ளடக்கிய குழுவை டெல்லிக்கு அழைத்து செல்ல கர்நாடகா அரசு தயாராக உள்ளது” என்று கூறினார்.