கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றார். அதேசமயம் 2016 ஜூன் மாதம் 6-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது. கிரண்பேடி பொறுப்பேற்கும்போது, இரண்டு ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தை விட்டு சென்று விடுவேன்' என்று கூறினார்.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து துணைநிலை ஆளுநர் பொறுப்பை வகித்து வந்தார். மேலும் ‘காங்கிரஸ் அரசு முன்னெடுத்தப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார் கிரண்பேடி’ என முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி வந்தார். இதனால் ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்குமான பனிப்போர் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வந்தது. அதையடுத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் மத்திய அரசு கிரண் பேடியை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் ஆட்சி முடிவுறும் தருவாயில் இன்று (17.02.2021) துணை நிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பைக் கூடுதலாக வழங்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக தங்களது பதவியை ராஜினமா செய்து வரும் சூழலில், காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகித்து வந்த கிரண்பேடி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.