உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.
அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், எம்.பியுமான ராம் கோபால் யாதவ் ராமர் கோவில் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அது தற்போது சர்ச்சையாகி மாறியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது ஒவ்வொரு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டம், இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்து இன்று கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 93 தொகுதிகளில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கோபால் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏன் ராமர் கோயிலுக்குச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ராம் கோபால் யாதவ், “அந்தக் கோவில் பயனற்றது. கோவில்கள் இப்படியா கட்டப்படுகிறது?. பழைய கோவில்களைப் பாருங்கள்.. அவர்கள் யாரும், தெற்கில் இருந்து வடக்கு வரை கட்டவில்லை. கோவிலின் வரைபடம் பொறுத்தமாக இல்லை. வாஸ்து படி குறிக்கும் அளவுக்கு இல்லை” என்று கூறினார்.
இவருடைய கருத்துக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “யாதவின் அறிக்கை சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் மற்றும் அவர்களின் இந்தியா கூட்டணியின் யதார்த்தத்தை காட்டுகிறது. இந்த மக்கள் வாக்கு வங்கிக்காக இந்தியாவின் நம்பிக்கையுடன் விளையாடுவது மட்டுமல்லாமல், பகவான் ஸ்ரீராமரின் தெய்வீக அதிகாரத்திற்கும் சவால் விடுகிறார்கள். தெய்வீக அதிகாரத்திற்கு சவால் விடும் எவருக்கும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது என்பதற்கு வரலாறு சாட்சி.
ராம் கோபால் யாதவின் அறிக்கை கோடிக்கணக்கான ராம பக்தர்களின் சனாதன நம்பிக்கையை அவமதிக்கும் செயலாகும். ராமர் கோவிலுக்கு தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்களின் நம்பிக்கை தாக்கப்படுகிறது. இதை இந்திய சமூகம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. திருப்திப்படுத்தும் கொள்கையைப் பின்பற்றி வாக்கு வங்கியைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் உண்மைத்தன்மை இத்தகைய அறிக்கைகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது” என்று கூறினார்.