லக்னோவில் இருந்து கான்பூர் வரை செல்லும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில், 11 வயது சிறுமியும், அவரது தாயும் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த சிறுமியின் தாய், அங்கிருந்து விலகிச் சென்றபோது அந்த சிறுமிக்கு அருகில் இருந்து நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, அந்த சிறுமி தனது தாயிடம் கூறியதையடுத்து, அந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பிற பயணிகள் அந்த நபரை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அந்த நபரை கான்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த நபர் பிரசாந்த் குமார் (34) என்பதும், அவர் ரெயில்வே ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பயணிகள் பிரசாந்த் குமார் கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால், ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரசாந்த் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.