கரோனா வைரஸுக்கு மருந்து கண்டறியும் வரை மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையிலான ஆத்மநிர்பார் உ.பி. ரோஜ்கர் அபியான் என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "நான் அனைவருமே நம் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்திருப்போம். பிரச்சனைகளும் இருக்கவே செய்யும். ஆனால் இப்படி ஒரே சமயத்தில் அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையை உலகம் எதிர்கொள்ளும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தச் சிக்கலிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்பது தெரியாது. ஆனால், கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் வரையில், மக்கள் அனைவரும் பொதுவெளியில் இரண்டு கஜம் அளவு சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிவதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கரோனா வைரஸ் காலத்தில் உ.பி. தைரியத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்தது. அது கரோனாவைக் கட்டுப்படுத்திய விதம் எதிர்கொண்ட விதம் சிறப்பானது. உலகின் பல நாடுகளை விட உ.பி. பெரியது. கரோனாவின் போது உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்ட கடின உழைப்பைப் பார்க்கும்போது, அது குறைந்தது 85,000 உயிர்களைக் காப்பாற்றியிருக்கும் என்று சொல்லலாம். உ.பி.யில் 2017க்கு முன்னர் இருந்த அரசாங்கம் இயங்கிய விதத்தில் இந்த முடிவுகளை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. முந்தைய அரசாங்கங்கள் இருந்திருந்தால், குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் மற்றும் படுக்கைகளைக் காரணமாகக்கூறி இந்த மிகப்பெரிய சவாலைத் தவிர்த்திருக்கும்" எனத் தெரிவித்தார்.