உத்தரபிரதேசம், கேரளா உளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்தாண்டு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தியா என்ற அணியில் ஒண்றினைந்துள்ளன. இந்த நிலையில் நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் உ.பி மாநிலத்தின் கோஷி தொகுதி, மேற்கு வங்கம் துப்குரி தொகுதி, உத்தரகாண்டில் பாகேஷ்வர் தொகுதி, திரிபுரா மாநிலத்தில் தன்பூர் மற்றும் போக்ஸாநகர் தொகுதிகள், ஆகிய 5 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில், மேற்கு வங்கம் மாநிலத்தில் துப்குரி தொகுதி, உத்தரபிரதேசம் மாநிலத்தில் கோஷி தொகுதி ஆகிய இரண்டிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற, திரிபுர மாநிலத்தில் தன்பூர் மற்றும் போக்ஸாநகர் ஆகிய 2 தொகுதி, மாநிலத்தில் பாகேஷ்வர் தொகுதி ஆகிய மூன்று இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்துள்ளது அக்கட்சியின் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கோஷி தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தாரா சிங் சவுகான் இருந்தார். இவர் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். மேலும், சமாஜ்வாடி கட்சியின் சார்பாக நின்று வென்ற தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இதன் காரணமாகவே அந்தத் தொகுதிக்கு தற்போது இடைத் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், கோஷி தொகுதியில் சமாஜ்வாடியில் இருந்து சென்ற தாரா சிங் சவுகான் மீண்டும் பாஜக வேட்பாளராக களம் இறங்கினார். சமாஜ்வாடி கட்சி சார்பில் சுதாகர் சிங் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பா.ஜ.க. வேட்பாளருக்காக அந்த மாநிலத்தின் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளருக்கு காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம். ஆகிய இந்திய கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்திருந்தது.
இந்த நிலையில், கோஷி தொகுதியில் பாஜக வேட்பாளர் தாரா சிங் சவுகானை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் சுதாகர் சிங் தோற்கடித்தார். ஒரு மாநிலத்தின் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை தோற்கடித்து எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது ஆச்சரியமாக பார்க்கப்படும். அந்தவகையில் தற்போது கோஷி தொகுதியில் சமாஜ்வாடி வென்றுள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, கோஷி தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருப்பது சாதனை என்று சொல்லப்படுகிறது.