தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வியையடுத்து, டெல்லியில் நேற்று முன்தினம் (21-12-23) காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாகப் பொறுப்புகளில் மாற்றம் செய்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்த பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆந்திரா, அந்தமான் நிகோபார் பகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக சச்சின் பைலட், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமார் கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.