புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (22/02/2021) காலை 10.00 மணிக்குத் தொடங்கியது.
அப்போது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது. கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற பணிகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றினோம். புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்வளவு இக்கட்டு வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக இரவு, பகல் பாராமல் போராடினோம். கிரண்பேடி அளித்த நெருக்கடியைக் கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம்.
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார்கள். 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளனர். புதுச்சேரியை மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகிவிட்டது. பல மாநிலங்களுக்கு 41% வரி கொடுத்தார்கள், ஆனால் புதுச்சேரிக்கு 21% வரி மட்டுமே கொடுத்தார்கள். மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சித்தது, ஆனால் நாங்கள் இருமொழிக் கொள்கையைக் கடைபிடிக்கிறோம். சட்டமன்றம் உள்ள புதுச்சேரியும், டெல்லியும் நிதி கமிஷனில் சேர்க்கப்படாமல் புறக்கணித்துள்ளது. கரோனா காலகட்டத்தில் சில தலைவர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்தனர். காங்கிரஸ் அரசு கரோனா காலத்தில் செயல்பட்டு தொற்றைக் கட்டுப்படுத்தியது. கரோனா காலத்தில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மக்களுக்காக சேவையாற்றினர்" என்றார்.
4 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் செய்த திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து பேசி வருகிறார்.