கரோனா தடுப்பூசி என்ற பெயரில் உப்புநீரைச் செலுத்தி பண மோசடி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவை எதிர்கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி என்ற அரசு மற்றும் மருத்துவர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து பொதுமக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள தாமாக முன்வந்து நீண்டநேரம் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து தடுப்பூசியை செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில், மக்களின் இந்த தடுப்பூசி ஆர்வத்தைப் பயன்படுத்தி மும்பையில் சிலர் தாங்களே அடுக்குமாடிக் குடியிருப்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் இருந்து பயன்படுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி மருந்து குப்பிகளைப் பெற்று, அவற்றில் சாதாரண உப்புநீரை நிரப்பி கரோனா தடுப்பூசி என மக்களுக்கு செலுத்தி பெரும் தொகையைக் கொள்ளையடித்துள்ளனர்.
இதுபோல் மும்பையில் சுமார் 2,000 பேருக்கு உப்புத் தண்ணீரைக் கரோனா தடுப்பூசி என செலுத்தியிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு என ஒதுக்கப்பட்ட குறியீடுகளைத் திருடி அதன்மூலம் இவர்களே போலியான சான்றிதழ்களையும் உருவாக்கியுள்ளதும் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து மும்பையில் 10 பேர் கைது செய்யப்பட்டு, உள்நோக்கமின்றி மரணம் விளைவித்தல், மோசடி, ஆள்மாறாட்டம், கலப்படம் என பல பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக ஆராய சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்திருக்கிறது மும்பை அரசு.