மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்தபடி கோவிலுக்கு சென்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 85 ஆயிரம் பேர் தரிசனம் செய்து வரும் நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் வரும் பக்தர்கள் எரிமேலி உள்ளிட்ட சில பகுதிகளில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேவஸ்தானம் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்க வேண்டும் என முடிவு செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதால், இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் காவலர்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் பலர் சன்னிதானத்திற்கு செல்லாமலேயே மற்ற இடங்களில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு திரும்பி வருகின்றனர்.
இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்ததே தற்பொழுது நிலவும் கூட்ட நெரிசலுக்கு காரணம் என தெரிவித்துள்ள பினராயி விஜயன், பக்தர்கள் கூட்டத்தை சரியான முறையில் ஒருங்கிணைத்து கையாளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலுக்கு 'திருப்பதி மாடல்' என்னும் நடைமுறையை கையில் எடுத்ததுதான் காரணம் என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விர்ஷுவல் கியூ எனப்படும் ஆன்லைன் பதிவில் முன்பதிவு செய்யப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரமாக அனுமதிக்கப்பட்டது. முன்பதிவு செய்தவர்களில் 80 சதவீதம் பேர் மட்டுமே வருவதற்கு வாய்ப்பிருந்தாக நினைத்த தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்தது. ஆனால் தேவஸ்தானத்தின் கணிப்புக்கு மாறாக 100 சதவிகித பக்தர்களும் குவிந்ததே இந்த கூட்ட நெரிசலுக்கு காரணம் என்பது வெளிவந்துள்ளது.
கடந்த எட்டு ஒன்பது வருடங்களாகவே ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் என்பது சபரிமலையில் இருந்து வருகிறது. இதனை கேரள போலீசார் நிர்வகித்து வந்தனர். கேரள போலீசாரின் கையில் ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கும் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திருப்பதியில் உள்ளது போல் சபரிமலை தேவசம்போர்டும், கேரள அரசும் ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷனை கண்ட்ரோலில் எடுத்துக் கொண்டார்கள். அதில் ஏற்பட்ட குழப்பங்கள் தற்பொழுது உச்சத்தை தொடும் அளவிற்கு சென்றுள்ளது என்று பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில் சபரிமலை கூட்டம் குறித்து தவறான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், சபரிமலை கூட்டத்தை அரசியல் ஆக்க வேண்டாம் எனவும், பக்தர்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயின் தெரிவித்துள்ளார்.