நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூத்த முதன்மைச் செயலர் நரேந்திர என் புடோலியா, மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “விமான நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே பாலங்கள், சாலைகள், அரசுப் பேருந்துகள், மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடம் போன்ற பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் உள்ள அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள், சுவர் எழுத்துகள், சுவரொட்டிகள், காகிதங்கள் அல்லது கட்அவுட்கள், பேனர், கொடிகள் போன்ற அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற உத்தரவிடப்படுகிறது.
நாடு முழுவதும் இன்னும் பல இடங்களில் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆணையத்திற்குப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கவனித்து வருகிறது. இதன் மூலம் அனைத்து அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களையும் உடனடியாக அகற்றி அதன் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையை நாளை (21.03.2024) அன்று மாலை 5:00 மணி வரை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.